

தூத்துக்குடி: கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கிக்கு பழமையான தனியார் வங்கி பிரிவில் தேசிய அளவில் 2-வது சிறந்த வங்கி விருது வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தனது நூற்றாண்டை கொண்டாடி வருகிறது. இந்நிலையில் 2019 - 2020-ம் ஆண்டுக்கான பழமையான தனியார் துறை பிரிவின் கீழ் தேசிய அளவில் இரண்டாவது சிறந்த வங்கியாக இவ்வங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஸ்டேட் போரம் ஆப் பேங்கர்ஸ் கிளப் கேரளா சார்பில் நடைபெற்ற விழாவில் இந்த விருதை பெடரல் வங்கி நிர்வாக இயக்குநரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷியாம் சீனிவாசன் வழங்கினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் அதன் துணைத் தலைவர் சிதம்பரநாதன் மற்றும் திருவனந்தபுரம் கிளை மேலாளர் பி.ஜெபானந்த் ஜூலியஸ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மேலும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் திருபுரம் கிளை 2019- 2020- ம் ஆண்டுக்கான மாநில அளவில் தனியார் துறை பிரிவின் கீழ் சிறந்த செயல்திறன் மிக்க மூன்றாவது கிளை விருதை பெற்றது. இவ்விருதை திருபுரம் கிளையின் மேலாளர் ஜார்ஜ் ஜான் பெற்றுக் கொண்டார்.