ராணிப்பேட்டை மாவட்டத்தில் - ஒரே நாளில் 100 ரவுடிகளின் வீடுகளில் : காவல் துறையினர் நேரடி விசாரணை :

ராணிப்பேட்டை மாவட்டத்தில் -  ஒரே நாளில் 100 ரவுடிகளின் வீடுகளில் : காவல் துறையினர் நேரடி விசாரணை  :
Updated on
1 min read

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 100 ரவுடிகளின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ஒரே நாளில் காவல் துறையினர் நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், காவல் துறை சார்பில் ரவுடிகள் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே 23 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதற்காக காவல் துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு ஊர்வலமும் நடத்தினர்.

இதன் ஒரு பகுதியாக, காவல் நிலையங்களில் சரித்திர பதிவேடு (ஹிஸ்டரி ஷீட்) கொண்ட ரவுடிகளின் நடவடிக்கைகளை விசாரிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சிவகுமார் உத்தரவிட்டுள் ளார். அதன்படி, நேற்று முன்தினம் (15-ம் தேதி) மாலை 4 மணிக்குத் தொடங்கி நேற்று காலை 10 மணி வரை அரக்கோணம் மற்றும் ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகள் குறித்து திடீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள நபர்களின் வீடுகளுக்கே காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவலர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் தற்போது என்ன தொழில் செய்து கொண்டிருக்கின்றனர் என்றும், சமீபத்தில் ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்பு இருக்கிறதா? என்றும் விசாரித்தனர்.

இதில், அரக்கோணம் உட்கோட்டத்தில் 23 பேரும், ராணிப்பேட்டை உட்கோட்டத்தில் 77 பேர் என மொத்தம் 100 ரவுடிகளின் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை ஒரே நாளில் சேகரித்துள்ளனர். இவர்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என வருவாய் கோட்டாட்சியர் அல்லது சார் ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கிக்கொள்ளவும் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in