குப்பை தரம் பிரிக்கும் மையத்தை குடியிருப்பு பகுதியில் அமைக்க எதிர்ப்பு :
தஞ்சாவூர் கண்ணன் நகர் குடியிருப்புப் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ரூ.75 லட்சம் செலவில் குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அங்கு சென்று ஆய்வு செய்த திமுக எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், இத்திட்டத்தை நிறுத்துவது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை தொடர்புகொண்டு பேசினார். இதுகுறித்து அவர் கூறியபோது, “தஞ்சாவூர் மாநகராட்சி பகுதியில் 15 இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் குப்பையை தரம் பிரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் என மக்கள் அச்சப்படுகின்றனர். இத்திட்டத்தை நிறுத்த அதிகாரிகள் மறுக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும், இதுபோன்ற மக்களுக்கு தொல்லை தரும் திட்டங்களை அமல்படுத்த மாட்டோம்” என்றார்.
