பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு : தாராபுரத்தில் எல்.முருகன், ஆயிரம் விளக்கில் குஷ்பு போட்டி

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு :  தாராபுரத்தில் எல்.முருகன், ஆயிரம் விளக்கில் குஷ்பு போட்டி
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரத்திலும், குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை எதிர்த்து பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் நிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. அக்கட்சிக்கு துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருவண்ணாமலை, தாராபுரம் (தனி), திருக்கோவிலூர், மொடக்குறிச்சி, கோவை தெற்கு, தளி, உதகமண்டலம், அரவக்குறிச்சி, திட்டக்குடி(தனி), திருவையாறு, காரைக்குடி,மதுரை வடக்கு, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்திவேட்பாளர் பட்டியலை தயார் செய்தனர். தயார் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலுடன் எல்.முருகன் தலைமையிலான குழுவினர் சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்றனர்.

வேட்பாளர் பட்டியல் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தினர். இந்நிலையில், முதல்கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.

அதன்படி, தாராபுரம் (தனி) - எல்.முருகன், துறைமுகம் - வினோஜ் பி.செல்வம், ஆயிரம் விளக்கு - குஷ்பு சுந்தர், திருவண்ணாமலை - எஸ்.தணிகைவேல், திருக்கோவிலூர் - விஏடி.கலிவரதன், மொடக்குறிச்சி - டாக்டர் சி.கே.சரஸ்வதி, கோவைதெற்கு - வானதி சீனிவாசன்,அரவக்குறிச்சி - கே.அண்ணாமலை, திட்டக்குடி (தனி) - டி.பெரியசாமி, திருவையாறு -பூண்டி எஸ்.வெங்கடேசன், காரைக்குடி - எச்.ராஜா, மதுரை வடக்கு -டாக்டர் சரவணன், விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன், ராமநாதபுரம் - டி.குப்புராம், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி, குளச்சல் - பி.ரமேஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். உதகமண்டலம், தளி, விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தாராபுரம் (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழி செல்வராஜை எதிர்த்து போட்டியிட உள்ளார். பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனையும், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமாரையும் எதிர்த்து களம் காண்கிறார்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகைகுஷ்பு, கடந்த சில நாட்களாக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். அதனால், அவர் அத்தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த தொகுதிகூட்டணி கட்சியான பாமகவுக்குஒதுக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் நா.எழிலனை எதிர்த்து குஷ்பு களம் இறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in