வைகுண்டம் தொகுதியில் - காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டி :

வைகுண்டம் தொகுதியில்  -  காங்கிரஸ் சார்பில் ஊர்வசி அமிர்தராஜ் போட்டி :
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக மறைந்த முன்னாள் எம்எல்ஏ ஊர்வசி டி. செல்வராஜின் மகன் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

திமுக கூட்டணியில் வை குண்டம் சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் (37) போட்டி யிடுவார் என காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித் துள்ளது.

இவரது தந்தை ஊர்வசி டி.செல்வராஜ் வைகுண்டம் தொகுதியில் கடந்த 2006 முதல் 2009 வரை காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர். அவரது திடீர் மறைவுக்கு பிறகு ஊர்வசி அமிர்தராஜ் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியில் 2006-ம் ஆண்டு முதல் உறுப்பினராக இருந்து வரும் இவர், தற்போது தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளராகவும் உள்ளார். கிறிஸ்தவ நாடார் வகுப்பை சேர்ந்தவர். பிடெக், எம்பிஏ படித்துள்ளார்.

இவருக்கு ஜெமிமா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். ஊர்வசி அமிர்தராஜ் சென்னையில் பொறியியல் கல்லூரி மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.

கடந்த 2016 தேர்தலில் வைகுண்டம் தொகுதியில் போட்டியிட இவர் முயற்சி செய்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் நிலவிய கோஷ்டி அரசியல் காரணமாக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த முறை அவருக்கு தான் சீட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஊர்வசி அமிர்தராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in