

திருச்சி- தஞ்சாவூர் இடையிலான உப்பு சத்தியாகிரக நினைவு தொடர் சைக்கிள் ஊர்வலம் நேற்று தஞ்சாவூருக்கு வந்தது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75-ம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அதை சிறப்பிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையில் 259 உறுப்பினர்கள் அடங்கிய தேசிய உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சார்பில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் குஜராத் மாநிலம் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டி வரையிலான நடைபயணம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழகத்தில் வர லாற்று சிறப்பு மிக்க உப்பு சத்தியாகிரகத்தை நினைவுகூரும் வகையில், திருச்சி முதல் வேதாரண்யம் வரை சுதந்திர போராட்ட நினைவு சைக்கிள் ஊர்வலம் திருச்சியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த ஊர்வலம் முக்கிய பகுதிகள் வழியாக சென்று, தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை வழியாக வந்து திருவையாறில் நிறைவடைந்தது.
இதைத் தொடர்ந்து, திருவை யாறில் இருந்து நேற்று காலை தொடங்கிய சைக்கிள் ஊர்வலம் தஞ்சாவூர் மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது. பின்னர், அங்கிருந்து சைக்கிள் ஊர்வலத்தை ஆட்சியர் ம.கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக, தியாகிகளை கவுரவித்து, ஊர்வலத்தில் பங்கேற்ற மாண வர்களுக்கு காந்தியடிகளின் சத்திய சோதனை புத்தகத்தை ஆட்சியர் பரிசாக வழங்கினார்.
இந்த ஊர்வலத்தில், ஆட்சியர் கோவிந்தராவ் 1 கி.மீ. தொலைவுக்கு நடந்துசென்று அனைவரையும் உற்சாகப்படுத்தினார். நிகழ்வில், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், மாவட்ட வருவாய் அலுவலர் அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், இந்த ஊர்வலம் அய்யம்பேட்டை, பாப நாசம், கும்பகோணம் வழியாக வலங்கைமானுக்குச் சென்றது. தொடர்ந்து, ஆலங்குடி, மன்னார் குடி, திருத்துறைப்பூண்டி, தகட்டூர் வழியாகச் சென்று வேதாரண்யத்தில் நிறைவடைய உள்ளது.