‘திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; தனித்துப் போட்டியிடலாம்’ : புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் தீர்மானம்

‘திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று  கட்சி அலுவலகத்தில்  நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆவேசமாக முறையிடும் காங்கிரஸார். படம்: எம்.சாம்ராஜ்
‘திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆவேசமாக முறையிடும் காங்கிரஸார். படம்: எம்.சாம்ராஜ்
Updated on
1 min read

புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுககட்சிகள் இடையே தொகுதிப்பங்கீட்டில் பிரச்சினை ஏற்பட,சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், காங்கிரஸுக்கு 15 இடங்கள், திமுகவுக்கு 13 இடங்கள், இந்திய கம்யூ., விடுதலை சிறுத்தைகளுக்கு முறையே ஒரு இடங்கள் என முடிவாகி, ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் புதுச்சேரி திரும்பினர்.

இந்நிலையில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நேற்று ஒன்று கூடி ஆலோசித்தனர்.

இக்கூட்டத்தில் காரசார விவாதங்கள் எழ, அதன் பின்பு, ‘காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடவேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

இதுதொடர்பாக இக்கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தரப்பில் கேட்டதற்கு, “புதுச்சேரியில் ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. கடந்த தேர்தலில் 15 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறோம். கூட்டணிக் கட்சியான திமுக புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தலா ஒரிடம் என மொத்தமாக இருஇடங்களை மட்டுமே வென்றிருந்தது. அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலில் கூடுதலாக ஒரு இடங்களைப் பெற்றது. மொத்தத்தில், கடந்த முறை 3 இடங்களை மட்டுமே பெற்ற கட்சி திமுக.

தற்போது காங்கிரஸுக்கு குறைவாகவும், திமுகவுக்கு அதிகமாகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால், ‘திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும்’ என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.

இத்தீர்மான விவரத்தை, டெல்லி தலைமைக்கு தெரிவிக்க இருப்பதாகவும் புதுவை காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in