

அனைத்து இளம் வாக்காளர்களும் தங்களது மின்னணு வாக்காளர் அடையாள அட்டையினை செல்போன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021-ல் புதியதாக சேர்க்கப்பட்ட இளம் வாக்காளர்கள் தங்களது செல்போனில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக இன்று(13-ம் தேதி) மற்றும் நாளை(14-ம் தேதி) சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறும். அங்கு தொடர்புடைய வாக்குச்சாவடி நிலைய அலுவலர், கணிப்பொறி இயக்குநர் ஆகியோர் இளம் வாக்காளர்களுக்கு அவர்களது செல்போனில் மின்னணு வாக்காளர் அடையாளஅட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள ஏதுவாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையினை தனியே வைத்துக் கொள்ளத் தேவையில்லை. மின்னணு கருவிகள் மூலமான தேவைகளுக்கு பயன்படுத்திட உதவியாக இருக்கும். எனவே, வாக்காளர்கள் 2 தினங்களில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்தி தங்களது செல்போனில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.