

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதியில் பட்டுக்கோட்டை சாலை, முதன்மைச் சாலை, சேது சாலை, ஆவணம் சாலை என 4 திசைகளிலும் மளிகைக் கடைகள், ஜவுளிக் கடைகள், நகைக் கடைகள், நகை அடகுக் கடைகள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளும், அரசு, தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்களும் உள்ளன.
கடந்த சில மாதங்களாக இந்த கடைவீதியில் உள்ள கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு, பணம் மற்றும் பொருட்களை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றன. கடந்த வாரம் ஆவணம் சாலையில் உள்ள ஒரு மருந்தகத்தில் பூட்டை உடைத்து திருட்டு நிகழ்ந்தது. நேற்று அதிகாலை சேது சாலையில் உள்ள ஒரு மளிகைக் கடையிலும், மருந்தகத்திலும் பூட்டு உடைக்கப்பட்டு, திருட்டு நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து கடை உரிமையாளர்கள் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் திருட்டுச் சம்பவங்களால், அப்பகுதி வியாபாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, நகர வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன் கூறியபோது, “பேராவூரணி காவல் நிலையத்தில் போதுமான எண்ணிக்கையில் காவலர்கள் இல்லாத நிலை உள்ளது. இங்கு இருக்கும் காவலர்களும் தேர்தல் பணி, நீதிமன்ற பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகச் சென்று விடுகின்றனர். எனவே, போதுமான எண்ணிக்கையில் காவலர்களை நியமித்து, ரோந்து செல்லவும், திருட்டு சம்பவங்களைத் தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.