

மீன்பிடி இறங்குதளம் அமைக்க வலியுறுத்தி சாமந்தான்பேட்டை மீனவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மீண்டும் அறிவித்துள்ளனர்.
நாகை சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்படும் என கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் அறிவித்தார். ஆனால், 5 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.
இதைக் கண்டித்து, அப்பகுதி மீனவர்கள் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்து, கடந்த டிச.21-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நாகை தாலுகா மீனவர்களும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதையடுத்து, சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தார்களை அழைத்துப் பேசிய ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, டிச.26-ம் தேதி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அதன்பிறகும் மீன் இறங்குதளம் அமைக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகூறி, அதன் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக மீண்டும் அறிவித்து, சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் மீனவர்கள் பதாகைகளை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சாமந்தான்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூறியபோது, “எங்கள் பகுதியில் 1,500 வாக்குகள் உள்ளன. மீன்பிடி இறங்குதளம் அமைப்பது தொடர்பாக சுமுக தீர்வு எட்டப்படாவிட்டால், ஒருவர் கூட வாக்களிக்க மாட்டோம்” என்றனர்.