

பேவநத்தம் சிவநஞ்சுண்டேஸ்வர சுவாமி கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் பேவநத்தம் கிராமத்தின் அருகே பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான சிவநஞ்சுண்டேஸ்வர சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சிவநஞ்சுண்டேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் வரிசையாக மலை ஏறி வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கெலமங்கலத்தில் பிரசித்தி பெற்ற கவுரிசித்தலிங்கேஸ்வரர் கோயிலில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஓசூர் சந்திரசூடேஸ்வரர் மலைக்கோயில், ராம்நகர் சோமேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் சிவராத்திரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.