

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிக்கஅனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களிப்பது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் பேசியதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 1603 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், 1,050 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை தேர்தல் ஆணையம் இரண்டாக பிரிக்கச்சொன்னதன் அடிப்படையில் கூடுதலா494 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மொத்த வாக்குச்சாவடிகள் 2,097 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் தபால் வாக்களிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் படிவம் 12 டி-யில் உள்ள விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்து, தங்களது செல்போன் எண்ணையும் குறிப்பிட்டு 12.03.2021 முதல் 16.03.2021 வரை 5 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவம் 12டி-ஐ அவர்களது வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் பெற்றுக் கொள்வார்கள்.அப்போது மாற்றுத்திறன் வாக்காளர்கள் வீட்டில் இல்லையெனில் 5 நாட்களுக்குள் மீண்டும் மறுமுறை சென்று படிவத்தை பெற்றுக்கொள்வார்கள்.
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளன்று (19.03.2021) படிவம்12டி-யில் உள்ள விவரங்களை தேர்தல்நடத்தும் அலுவலர் சரிபார்த்து, வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதாஎன்பதை உறுதி செய்து, தகுதியான நபர்களுக்கு அவரால் நியமனம் செய்யப்படும் குழு மூலம் தபால் வாக்குவழங்குவார். அந்த தபால் வாக்குச்சீட்டில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாக்கை ரகசியமாக செலுத்தி அதிகாரிகள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் வரும் 15-ம்தேதி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற உள்ளது என்றார்.
கூட்டத்தில் கோவில்பட்டி வருவாய்கோட்டாட்சியர் சங்கரநாராயணன், துணை ஆட்சியர் (பயிற்சி) சதீஸ்குமார்,மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.