வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி :
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், பாளையங்கோட்டையில் வாக்காளர் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
தூய சவேரியார் கல்லூரி வாயிலில், மண்டல உதவி ஆணையர் பிரேம்ஆனந்த், சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜரத்தினம், தூய சவேரியார் கல்லூரி முதல்வர் அருட்தந்தை மரியதாஸ் ஆகியோர் பேரணியைத் தொடங்கி வைத்தனர். ஹைகிரவுண்ட், அன்புநகர், பெருமாள்புரம், புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் கல்லூரியை பேரணி வந்தடைந்தது. 15 கி.மீ. தூரம் சென்ற இப்பேரணியில் சவேரியார் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் 50 பேர் பங்கேற்றனர்.
கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் டேவிட் அப்பாத்துரை, சேதுராமன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இதுபோல் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் சதக்கத்துல்லா அப்பா கல்லூரி இளைஞா் நலத்துறை மற்றும் கல்லூரி நூலகம் இணைந்து வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தின. நூலகத்துறை தலைவா் ஆா்.ஆா்.சரவணக்குமார் வரவேற்றார். துணை முதல்வர் எஸ்.எம்.ஏ.செய்யது முகம்மது காஜா தலைமை வகித்தார்.
மாவட்ட துணை ஆட்சியா் (பயிற்சி) மற்றும் வாக்காளா் விழிப்புணா்வு பொறுப்பு அலுவலா் மகாலட்சுமி பரிசுகள் வழங்கினார். மாவட்ட மைய நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கோ.கணபதி சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார். உதவி பேராசிரியா் எம்.சாதிக் அலி நன்றி கூறினார்.
