

மத்திய பாஜக அரசுக்கு துணையாக இருப்பதால் அதிமுக மீது தமிழக மக்கள் அதிருப்தியாக இருக்கின்றனர் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:
முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த தேர்தல் யாருக்கு சாதகமாக இருக்கும்?
இந்த தேர்தல் திமுகவுக்கு தான் சாதகமாக இருக்கிறது. மக்கள் நலனை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டணி கொள்கையுடன் செயல்படுகிறது. அதிமுக, பாஜக, பாமக சந்தர்ப்பவாத அடிப்படையில் தேர்தலுக்காக கைகோர்த்துள்ளனர். இதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் உள்ளிட்ட பல்வேறு குறைபாடு இருப்பதால் மக்கள் மத்தியில் அதிருப்தி இருக்கிறது. எதிர் அணியின் பலவீனம், எங்களுக்கு பலமாக இருக்கிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும்.
திமுக கூட்டணியில் ஏற்கெனவே 10 இடங்களை பெற்ற விசிக, இந்த முறை 6 தொகுதிகளுக்கு உடன்பட்டது ஏன்?
ஒவ்வொரு தேர்தலுக்கும் தொகுதிகளை அதிகரித்து கேட்க வேண்டுமென்பது கிடையாது. ஒவ்வொரு தேர்தலில் கூட்டணி அமைவது, வெற்றி வாய்ப்பு உள்ளிட்டவை கொண்டே தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. அதன்படி, தற்போதுள்ள அரசியல் நிலைமை, எத்தனை கட்சிகள் கூட்டணியில் இருக்கிறது என்பதை கணக்கில் கொண்டேகூட்டணியில் தொகுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இது எங்களுக்கு பின்னடைவு கிடையாது.
விசிக தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறதா?
தனிச் சின்னத்தில் போட்டிடுவது என்பது எங்களது கொள்கையாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படவில்லை. விசிக தனிக்கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும். மக்களின் நம்பிக்கை பெற்று வளர வேண்டுமென்பதே நோக்கமாகும்.
கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை குறைத்து, திமுக அதிக இடங்களில் போட்டியிட முயல்வதே இதற்கு காரணமாக பார்க்கிறீர்களா?
அதுவும் ஒரு காரணம். மேலும், வெற்றிபெறும் அணியாக இருக்கிறது. அதிகளவில் போட்டியிடுவது என்பதை விட, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டுமென நினைக்கிறோம்.
அடுத்த தேர்தலில் திருமா எங்கள் அணிக்கு வருவார் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் கூறியிருக்கிறாரே?
அவரது கரிசனத்துக்கு நன்றி. இருப்பினும், அவரது நோக்கம் என்பது திமுகவை பலவீனப்படுத்த வேண்டுமென்பது தான்.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை எப்படி பார்க்கிறீர்கள்?
நாங்கள் இடஒதுக்கீடு, உள்ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், இது அரசியல் ஆதாயத்துக்காக அவசர கோலத்தில் அள்ளிதெளித்த கதையாக நடந்திருக்கிறது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அவர்களின் தேவையை கண்டறிந்து வழங்க வேண்டுமென்பதே எங்களது விருப்பமாகும். ஆணையத்தின் அறிக்கை வருவதற்கு முன்பே, அறிவித்திருப்பது அரசியல் ஆதாயத்துக்கான முயற்சியாகும்.
திமுக கூட்டணி கட்சிகள் இந்து கடவுளை அவமதித்து வருகின்றனர், அவர்களை வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனரே?
பாஜகவின் இந்த பிரச்சாரம் தமிழகத்தில் எடுபடாது. வடஇந்தியாவில் இதுபோன்ற பிரச்சாரம் எடுபடலாம். பாஜக போட்டியிடும் 20 இடங்களிலும் தோல்வி அடையும்.
மத்திய பாஜக அரசின் ஆட்சியை பற்றி உங்களது கருத்து என்ன?
வெகுமக்களின் விரோத ஆட்சியாக இருக்கிறது. பெரிய நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நாட்டின் சொத்துக்களை தனியாருக்கு விற்கும் அரசாக இருக்கிறது. இது மக்களுக்கான நல்ல அரசாக இல்லை.
தமிழகத்தில் 3-வது அணிக்கு வாய்ப்பு எப்படி இருக்கிறது? ஏற்கெனவே நீங்களும் மக்கள் நலக்கூட்டணியை அமைத்திருந்தீர்கள்?
தமிழகத்தில் 3-வது அணி என்பது மழை காலத்தில் உருவாகும் ஈசல் அணி போன்றதாகும். அது நாங்கள் உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணியாக இருந்தாலும் சரி, வேறு 3-வது அணியாக இருந்தாலும் சரி அதற்கான ஆயுட்காலம் குறைவு தான்.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வலுவான அணி அமைய வாய்ப்பு இல்லையா?
மாற்று அரசியல் சிந்தனையோடு, தொலைநோக்கு பார்வையோடு தேர்தலில் தொடர்ந்து போட்டியிட்டு, வெற்றி தோல்வியை சந்தித்து,மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதன்பிறகே மக்களின் ஆதரவை பெற முடியும்.
விசிக போட்டியிடும் 6 தொகுதிகள் எவை? தனித்தொகுதிகளில் மட்டுமே போட்டியிட முடிவா?
எங்களுக்கான தொகுதிகள் எவை என்பதை கண்டறிய விருப்ப மனுக்களை ஆய்வுசெய்து, அதன்பிறகு திமுகவோடு பேசி முடிவெடுப்போம். 2 பொது தொகுதிகளையும் கேட்டு பெறவுள்ளோம்.
சசிகலா அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்துள்ளாரே?
அவரது உடல் நலனை கருத்தில் கொண்டுஇந்த முடிவை எடுத்திருந்தால் வரவேற்கத்தக்கது. வேறுஏதேனும் நெருக்கடியாலோ, அச்சுறுத்தலின்பேரில் இந்த முடிவு எடுத்தார்களா என தெரியவில்லை. அவர் உடல்நிலை நலமடைந்த பிறகு தீவிர அரசியலிலும் ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் அதிமுக அரசின் 10 ஆண்டு ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள்?
5 ஆண்டுகள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி காலம். கடந்த 5 ஆண்டுகால ஆட்சி என்பது தமிழகத்தில் பாஜகவின் ஆட்சி காலம்போல் இருக்கிறது. சில சலுகைகள், திட்டங்களை அறிவித்திருந்தாலும், 10ஆண்டு காலம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வேளாண்மை சட்டம் போன்ற பல்வேறு சட்டங்களுக்கு மத்திய பாஜக அரசுக்கு,அதிமுக துணையாக இருப்பதால் மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.