

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் தேர்தல் பணிகளில், காவல் துறையினரின் செயல்பாடுகள் தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து காவல்துறையினருடன் நேற்று மாவட்ட நிர்வாகத்தினர் ஆலோ சனை நடத்தினர்.
இக்கூட்டத்திற்கு தலைமை யேற்ற மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அண்ணாதுரை பேசியது:
மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சிப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது என்று தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதனை மீறி விளம்பரம் செய்யும் கட்சி யினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். கிராமப்புறங்களில், தனிநபர் இடங்களில் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது.
5 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி
தேர்தல் விதிகளை மீறு வோர் யாராக இருந்தாலும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அரசியல்கட்சியினர் வழங்கும் துண்டு பிரசுரங்களில், அச்சக உரிமையா ளர் விவரம் இல்லையென்றால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.
விழுப்புரம் விடுதிகளில் சட்ட விரோத செயல்கள்
“விடுதிகளில் வெளியாட்கள் யார் தங்கியிருக்கிறார்கள் என்ற விவரங்களை நாள்தோறும் சேகரிக்க வேண்டும். விழுப்புரம் நகரில் உள்ள விடுதிகளில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வருகின்றன. இதனை தடுக்க வேண்டும்” என்றும் இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். தேர்தலை அமைதியாக நடத்திடும் வகையில் ரவுடிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும். சந்தேகப்படும் நபர்களை பிடித்து, விசாரணை செய்து, குற்றப் பின்னணியில் தொடர்பிருந்தால் அவர்களை கைது செய்ய வேண்டும். அந்தந்த காவல்நிலையங்களுக்குட்பட்ட பகுதியில், உரிமம் பெற்று வைத்துள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஒப்படைக்கப்பட்டு விட்டதா? என்பதை காவல் துறையினர் உறுதிசெய்து கொள்ள வேண்டும்.
வாகன சோதனையில் அலட்சியம்
கெங்கராம்பாளையம், வானூர்பகுதிகளுக்கு நான் சென்ற போது சோதனைச் சாவடிகளில் போலீஸார் உட்கார்ந்து கொண்டிருக்கின்றனர். சோதனைகள் நடைபெறவில்லை. சோதனைச் சாவடி போலீஸாரின் செயல்பாடுகள் சரியில்லை. அடுத்த முறை நான் செல்லும்போது இதுபோன்று இருந்தால் போட்டோ எடுத்து எஸ்.பிக்கு அனுப்பப்படும்.
தேர்தல் காலத்தை உணர்ந்து காவல்துறையினர் செயல்படவேண்டும். இல்லையென்றால் பணியிடை நீக்க நடவடிக்கை இருக்கும். அந்தந்த உட்கோட்ட டிஎஸ்பிக்கள் இதனை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், காவல் துறை டிஎஸ்பிக்கள் நல்லசிவம், ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.