

முதல்வர் பழனிசாமியை நேற்று நேரில் சந்தித்த பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவையும் தெரிவித்தனர். தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு பல்வேறு சிறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முதல்வரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று, முதல்வர் பழனிசாமியை, இஸ்லாமிய அமைப்புகளான நாகூர் தர்கா டிரஸ்டி செய்யது யூசுப் சாகிப் காதிரி, அகில இந்திய சுன்னத்துல் ஜமாத் சுல்தான் கலிபா காதிரி, சாஹிப்பர் மக்கள் முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த ஜான் செய்யது மீரான் சாஹிப் காதிரி, நவாப் வாலாஜா பள்ளி கூட்டமைப்பு முத்தவல்லி ஹாஜா நஜ்முதீன் முகலி, தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளிவாசல்களின் சங்கம் செய்யது முகமது கலிபா சாஹிப், னூரே ஜமாலியா கூட்டமைப்பு னவாஜ் முகமது ஹக், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் செய்யது மீரான், ஹஸ்வத் நீலம் பாஷா தர்கா மற்றும் பள்ளிவாசல் குலாப் அலிஷா முத்தவல்லி, முஸ்லிம் சாரிட்டபிள் அசோசியேஷன் நிறுவன தலைவர் பி.அன்வர் பாஷா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் சந்தித்து தங்களின் முழு ஆதரவையும் தெரிவித்தனர். அவர்களுக்கு முதல்வர் பழனிசாமி தனது நன்றியை தெரிவித்தார். அப்போது அமைச்சர் கே.பாண்டியராஜன் உடன் இருந்தார்.