

கடின உழைப்பே பெண்களின் வெற்றியின் சாதனை என பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக மகளிரியல் மையம் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவுக்கு, தலைமை வகித்து பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல் பேசியதாவது:
பெரு வெற்றி அடைந்த அறிவியலாளர் மேரி கியூரி உள்ளிட்ட பெண் சாதனையாளர்கள் தங்களது விடாமுயற்சியினாலும், கடின உழைப்பினாலுமே வெற்றியை சாத்தியமாக்கியுள்ளனர். எனவே, இளம் தலைமுறை மகளிர் தங்களுக்கான இலக்கை நிர்ணயித்துக் கொண்டு, அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் சமத்துவமான சமூகத்தில் தங்களது தனித்துவமான அடையாளத்தை நிறுவ முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் டி.ஸ்டாலின் குணசேகரன், பல்கலைக்கழக மகளிரியல் மைய ஒருங்கிணைப்பாளர் முனைவர் லலிதா, துணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் பரமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அரசு அலுவலகங்களில் மகளிர் தின விழா
உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அமைச்சு பெண் பணியாளர்கள் ஒரே வண்ணத்தில் சேலையை அணிந்து பணிக்கு வந்தனர். இதையொட்டி, மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார், பெண் பணியாளர்களுக்கு மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாகாணிகரை சந்தித்து பெண் காவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் கேக் வெட்டியும், பரிசுப் பொருட்களை அளித்து, வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.