5 ஆண்டுகளாக கல்லூரி இழுத்தடிப்பு - வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் :

5 ஆண்டுகளாக கல்லூரி இழுத்தடிப்பு -  வட்ட சட்டப் பணிகள் குழு மூலம் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் :
Updated on
1 min read

தனியார் பொறியியல் கல்லூரியில் இருந்து வட்ட சட்டப்பணிகள் குழு மூலம் இரு மாணவர்களின் கல்விச் சான்றிதழ் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் திரும்ப பெறப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

தேனி மாவட்டத் தைச் சேர்ந்தவர் கண்ணன், கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாகுல் ஹமீத். டிப்ளமோ முடித்த இருவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டில் சேர்ந்தனர். குடும்பச் சூழல் காரணமாக கல்லூரிக்கு கட்டணம் செலுத்தி படிப்பை தொடர முடியவில்லை. எனவே, கல்லூரி படிப்பை பாதியில் கைவிட்டன்.

மேலும், கலை, அறிவியல் பிரிவில் பட்டப்படிப்பை வேறு கல்லூரியில் படிக்க விரும்புவதால் தங்களது சான்றிதழ்களை திருப்பிக்கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட பொறியியல் கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். எனினும், 4 ஆண்டுக்கான முழுக்கட்டணத்தையும் செலுத்தினால் மட்டுமே சான்றிதழ் வழங்க முடியும் என கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கண்ணன், ஷாகுல் ஹமீத் ஆகியோர் ராசிபுரம் வட்ட சட்டப் பணிகள் குழுவில் மனு அளித்தனர். மனுவை ஏற்ற சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான சரவணன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான தனசேகரன் ஆகியோர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு 2 மாணவர்களின் அசல் சான்றிதழ்களையும் தனியார் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து பெற்று மாணவர்களிடம் திருப்பி அளித்தனர்.

மேலும், பல்கலைக்கழக மானிய குழுவின் அறிக்கையை சுட்டிக்காட்டி எந்த ஒரு கல்லூரியும், எந்த ஒரு மாணவரின் அசல் கல்வி சான்றிதழ்களையும் வைத்துக்கொள்ள உரிமையில்லை. இதனை மீறுவது சட்டப்படி குற்றமாகும் என உயர் நீதிமன்ற தீர்ப்பினை மாவட்ட முதன்மை நீதிபதி தனசேகரன் சுட்டிக்காட்டிக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in