

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு 13 சிறிய கட்சிகள் தங்களின் ஆதரவைத் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காகக் கூட்டணிக் கட்சிகளுடன் அதிமுக தலைமை பல்வேறு கட்டமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முன்னதாக, பாமகவுக்கு 23 தொகுதிகளையும், பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சு நடத்து வருகிறது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பல்வேறு சிறு கட்சிகளின் தலைவர்கள் நேற்று வந்திருந்தனர். அதன்படி, மனித உரிமை காக்கும் கட்சி எம்.கார்த்திக், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி என்.ஆர்.தனபாலன், மூவேந்தர் முன்னணி கழகம் ந.சேதுராமன், பசும்பொன் தேசிய கழகம் எம்.ஜோதி முத்துராமலிங்கம், பாரதிய பார்வர்டு பிளாக் கட்சி முருகன் ஜி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி கே.மணிகண்டன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் எஸ்.ஷேக் தாவூத், இந்தியத் தேசிய குடியரசு கட்சி சி.அம்பேத்கர் பிரியன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் இடிமுரசு இஸ்மாயில், தமிழக ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி எம்.எப்.தமீம், செங்குந்தர் அரசியல் அதிகாரம் சரவணவேல், இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் ஆகிய 13 கட்சிகளின் தலைவர்கள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட மூத்த தலைவர்களைச் சந்தித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
அதில், புதிய நீதிக் கட்சி, இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் தலா 3 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளன. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடவும் அவை விருப்பம் தெரிவித்துள்ளன.