

திமுக முன்னாள் பொதுச்செய லாளர் க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, அவரது படத்துக்கு திமுகதலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
திமுக பொதுச் செயலாளராக இருந்த க.அன்பழகன், கடந்த ஆண்டு மார்ச் 7-ம் தேதி காலமானார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.இதையொட்டி, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகனின் இல்லத்தில் அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அவரது படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தும், மலர்தூவியும் அஞ்சலி செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் அன்பழகன் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
திராவிடக் கொள்கையில் உறுதி
இளம்பருவத்தில் தன் நெஞ்சில் ஏந்திய திராவிடக் கொள்கையை முதுமையிலும் வைரம் பாய்ந்த மரம்போல உறுதியாகப் பற்றி நின்றவர் அவர்.
பெரியாரின் பகுத்தறிவுப் பள்ளி மாணவராக, அண்ணாவின் அன்புத் தம்பியாக, கருணாநிதிக்கு கொள்கைத் தோழராக, இயக்கக் கருத்தியலின் தலைவராக தன்வாழ்நாள் முழுவதும் திராவிடம்பரப்பிய, பாடுபட்ட க.அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளில், அவர் கற்றுத் தந்த தத்துவப் பாடங்களை நெஞ்சில் ஏந்தி,மதவாத, பிற்போக்கு, அடிமை சக்திகளை முறியடித்து, மதநல்லிணக்க சுயமரியாதைமிக்க சமூகநீதி இயக்கங்களின் மகத்தான வெற்றிக்கு அயராது பாடுபட உறுதியேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.