

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்துள்ளது. பாமகவுக்கு 23 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. எந்தந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 2009-ம் ஆண்டு வரை அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக இருந்தது. 2011-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பாமகவுக்கு அங்கீகாரம் இல்லை. ஆனால், புதுச்சேரில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பாமக உள்ளது.
புதுச்சேரியில் பாமகவுக்கு மாம்பழம் சின்னம்இருப்பதால், அருகில் உள்ள தமிழகத்திலும் அதே சின்னத்தில் போட்டியிட முடியும். அதன்படி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பாமகவுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி சென்னையில் ராமதாஸால் பாமக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் யானை சின்னத்தில் போட்டியிட்டு வந்த பாமக, 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முதல் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது.