

அதிமுகவுடன் தேமுதிக, சென்னையில் நேற்று 3-ம் கட்ட பேச்சுவார்தையை நேற்று மேற்கொண்டது. 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுளளது.
அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக சார்பில் ஆரம்பத்தில் 41 தொகுதிகள் கேட்கப்பட்டன. கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கும் ஒதுக்கவுள்ளதால் இவ்வளவு இடங்கள் ஒதுக்க முடியாது என அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 23 தொகுதிகள் வரை ஒதுக்க வேண்டுமென தேமுதிக நிர்வாகிகள் 2-ம் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் வலியுறுத்தினர். ஆனாலும், அவர்களது கோரிக்கையை அதிமுக ஏற்கவில்லை.
இதற்கிடையே, சென்னை எம்ஆர்சிநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரை தேமுதிக துணை செயலர் பார்த்தசாரதி, அவைத் தலைவர் அழகாபுரம் மோகன்ராஜ் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினர். இந்த 3-ம் கட்ட பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பில் 23 தொகுதிகள், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்கப்பட்டன.
ஆனால், அதிமுக தரப்பில் 15 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதிமுகவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோருடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. இதையடுத்து, அடுத்த ஓரிரு நாளில் தொகுதிகள் உடன்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறிய தொகுதிகள் எண்ணிக்கை குறித்து விவாதித்தோம். ஆரம்பத்தில் 41 தொகுதிகளை கேட்டோம். ஆனால், தற்போது 23 தொகுதிகள் வழங்க வேண்டுமென கேட்டுள்ளோம். அதிமுக வழங்க சம்மதித்துள்ள தொகுதிகள் குறித்தும், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்தும் எங்கள் கட்சியின் தலைவர் விஜயகாந்திடம் தெரிவித்து முடிவெடுப்போம். எங்கள் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. அடுத்த ஓரிரு நாளில் கூட்டணி இறுதி செய்து அறிவிக்கப்படும்’’என்றார்.