

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க தொட்டிகளில் தண்ணீர் விடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வனப்பகுதிகளில் உள்ள கசிவுநீர் குட்டை, சிறு தடுப்பணை, குட்டை, குளம், ஏரிகளில் தண்ணீரின்றி வறண்டுள்ளது. சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட சேர்வராயன் மலைத்தொடர், கல்வராயன் மலைப்பகுதி, பச்சமலை உள்ளிட்ட கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மான், காட்டு எருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. கோடை வெயில் தாக்கத்தால் அடிக்கடி மான், காட்டு எருமைகள் வன கிராமங்களுக்குள் வந்து, செல்வதால் கிணற்றில் தவறி விழுவதும், வாகன விபத்தில் சிக்கி உயிரிழப்பதும் நடந்து வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். அதேபோல, வனப்பகுதியில் உள்ள கசிவு நீர் குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளுக்கும் தண்ணீர் விடவும் வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.