

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், வழக்கத்தை விட ஏற்காட்டுக்கு பயணிகள் வருகை குறைந்துள்ளதால், வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சேர்வராயன் மலையின் மீதுள்ள ஏற்காடு தமிழகத்தின் முக்கிய கோடை வாழிடங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, ஆண்டு முழுவதும் குளுகுளு சூழல் நிலவுவதும், தங்கும் செலவு குறைவு உள்ளிட்ட காரணங்களால் இது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகிறது.
இங்கு தமிழகத்தின் பல பகுதியில் இருந்தும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் இருந்தும் ஆண்டு முழுவதும் பயணிகள் வருகை இருக்கும். கோடை காலத்தில் பயணிகள் வருகையால் களைகட்டும். இதன் மூலம் அங்குள்ள சுற்றுலா தொழில்களில் வர்த்தகம் அதிகரிக்கும்.
தற்போது, கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், சேலம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. இதனால், ஏற்காட்டுக்கு பயணிகள் வருகை அதிகரிக்கும் என அங்குள்ள வியாபாரிகள் எதிர்பார்த்த நிலையில், கடந்த இரு வாரங்களாக பயணிகள் வருகை வழக்கத்தைவிட குறைந்துள்ளது.
இதுதொடர்பாக சுற்றுலாத் துறையினர் மற்றும் வியாபாரிகள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டபோது, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பயணிகள் வருகை அதிகரித்திருந்தது. ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் ஏற்காட்டுக்கு வர இ-பாஸ் நடைமுறை இருந்தபோது, இதை அறியாமல் பலர் இ-பாஸ் இல்லாமல் வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதன் பின்னர் மழை, குளிர்காலம் என சாதகமற்ற பருவநிலையிலும் கூட, பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. இந்நிலையில், கடந்த இரு வாரங்களாக பயணிகள் வருகை குறைந்துள்ளது.
கோடை தொடங்கினால் ஏற்காட்டில் சுற்றுலாத் தொழில் வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைய சூழல் ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.