

வாக்குக்கு பணம் கொடுப்பது உள்ளிட்ட, தேர்தல்விதிமீறல்கள் தொடர்பாக மக்கள் புகார் தெரிவிக்க 'சி-விஜில்'எனும் செயலியை தேர்தல் ஆணையம் 2018-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.
இந்தச் செயலியை (c -VIGIL) ‘ஸ்மார்ட் போன்’ வைத்திருப்பவர்கள் ‘கூகுள் பிளே ஸ்டோர்’ அல்லது தேர்தல் ஆணையம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செயலாம். அதில், அலை பேசி எண், பெயர், முகவரி, மாநிலம், மாவட்டம், பின்கோடு ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்களில் ஈடுபடுவதை தாங்கள் அறியநேர்ந்தால், அதனை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து, உரிய ஆதாரத்துடன் செயலியில் பதிவு செய்து, புகார் தெரிவிக்கலாம். தகவல் கொடுப்பவர் தனது பெயர் விவரத்தை வெளியிடாமல் ரகசியம் காக்கவிரும்பினால் அதற்கான வசதியும் அதில் உள்ளது.
இந்தச் செயலி மூலம் பெறப்படும் புகார்களின் மீது 100 நிமிடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகார் கொடுத்தவரின் அலைபேசி எண்ணிற்கு நடவடிக்கை எடுத்த பின் அது தொடர்பான விவரங்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்று தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இந்த ’சி - விஜில்’ செயலி இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே உள்ளது. இம்மொழிகள் தெரியாதவர்கள் இச்செயலியை பயன்படுத்த இயலாத நிலையே உள்ளது. நேர்மையாக தேர்தலை அணுக விரும்புவோர் தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளையும் இந்த ‘சி- விஜில்’ செயலியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.