

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பணியாற்றவுள்ள 18,000 அலுவலர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், காவல்துறையினருக்கு கரோனா தடுப்பூசிபோட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியான ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்தலைமை வகித்தார். அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், கரோனா தடுப்பூசி எவ்வாறுசெயலாற்றுகிறது என்பது குறித்து எடுத்துக்கூறினார்.
முகாமில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் சுமார் 100 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற 12 ஆயிரம் அலுவலர்கள், ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும், வருவாய் துறையினர் 1,800 பேர், ஊரக வளர்ச்சித் துறையினர் 1,300 பேர், காவல் துறையினர் 3,000 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் சுமார் 18 ஆயிரம் பேர் தேர்தல் பணியாற்றவுள்ளனர். இவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 20 மையங்களில் தினமும் 100 முதல் 200 பேர் வரை கரோனா தடுப்பூசி போடப்படும் என்றார்.
ஆலோசனை கூட்டம்
வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் வாகனங்களும் தணிக்கை செய்யப்படும். எனவே, உரிய ஆவணங்களுடன் வாகனங்களை அனுப்ப வேண்டும். ரூ.10 லட்சத்துக்கு மேல்பணப் பரிவரித்தனை செய்வோரை வருமான வரித்துறை மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள அச்சகங்கள், பதாகை தயார் செய்வோர் உரிய அனுமதிக் கடிதம் இல்லாமல் துண்டுப் பிரசுரங்கள் மற்றும்பதாகைகளை தயாரித்து கொடுக்கக் கூடாது. அனுமதி எண்இல்லாத பதாகைகள் அகற்றப்படும். தோ்தல் அதிகாரியின் அனுமதி இல்லாமல், திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய கூட்டரங்குகளில் கூட்டம் நடத்தக் கூடாது என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அமுதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சதீஷ்குமார், தேர்தல் வட்டாட்சியர் ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.