

‘ரங்கசாமி’ முதல்வராக இருந்த போதிலும், எதிர்க்கட்சித் தலைவராக நீண்ட நாட்களாக மவுனமாக காய் நகர்த்தி வரும் போதிலும் புதுவை அரசியலைப் பொறுத்த வரையில் இந்தப் பெயருக்கு தனி இடம் உண்டு. புதுச்சேரியில் அதிக நாட்கள் முதல்வராக இருந்த பெருமை ரங்கசாமிக்கு உண்டு.
1990-ல் தட்டாஞ்சாவடியில் காங்கிரஸில் நின்று தேர்தலைச் சந்தித்தவர் ரங்கசாமி. முதலில் பெத்தபெருமாளிடம் தோல்வியைத் தழுவ, அதே பெத்தபெருமாளை அடுத்தாண்டு நடந்த பொதுத் தேர்தலில் வீழ்த்தி, வேளாண் அமைச்சரானார். அதன் பின் கல்வியமைச்சரானார்.
2001-ல் காங்கிரஸில் முதல்வர் பதவிக்கு உயர்ந்தார். 2006-ல் முதல்வரானார். காங்கிரஸ் உட்கட்சி பிரச்சினையால் 2008-ல் முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. காங்கிரஸ் மேலிடத்தால் வைத்திலிங்கம் முதல்வர் ஆக்கப்பட்டார்.
2011- பிப்ரவரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் என்.ஆர்.காங்கிரஸை தொடங்கினார். கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 15 இடங்களில் ரங்கசாமி வென்றார். தேர்தலுக்குப் பின் அதிமுகவை கழற்றி விட்டு. சுயேச்சை ஆதரவுடன் ரங்கசாமி ஆட்சி அமைத்து, மீண்டும் முதல்வரானார். இதனால். ஜெயலலிதா கடும் கோபமடைந்து ரங்கசாமியை விமர்சித்தார்.
2016-ல் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியைத் தழுவ எதிர்க்கட்சி தலைவரானார் ரங்கசாமி. நீண்ட நாட்களாக மவுன அரசியலை மேற்கொண்டு வந்தார். பெரிய அளவில் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்பதில்லை. ஆன்மிகப் பயணங்களில் ஆர்வம் காட்டி வந்தார்.
இந்த சூழலில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்க காங்கிரஸ், திமுக மற்றும் பாஜக - அதிமுக கூட்டணி என அனைத்து தரப்பினரும் ரங்கசாமியை அணுகினர்.
அவர்களுக்கெல்லாம் தான் பாஜக கூட்டணியில் இருப்பதாகவே காட்டிக் கொண்டார் ரங்கசாமி. அண்மையில், புதுவைக்கு வந்த பிரதமர் மோடியை சந்தித்தார். ஆனாலும், தற்போது பாஜகவுக்கு பிடி கொடுக்க மறுப்பதாக பேச்சு எழுந்துள்ளது
“கூடுதல் தொகுதியில் போட்டியிட எங்கள் தலைவர் விரும்புகிறார். பாஜக கூட்டணியில் குறைவான இடங்களே கிடைக்கும். அதனால், அக்கூட்டணியை தவிர்க்கிறார். அண்மையில், காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த தனது மருமகனான நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிலைப்படுத்துவதால் எங்கள் தலைவர் சற்று அதிருப்தியில் இருக்கிறார்” எனஎன்.ஆர்.காங்கிரஸார் கூறுகின்றனர்.
இது வரையிலும், ரங்கசாமி தனது முடிவு என்ன என்பதை வெளியில் சொல்லவில்லை.
பிரதான எதிர்க்கட்சி என்பதால், இவர் என்ன செய்யப் போகிறார் என்பது புதுவை அரசியலில் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதைக் கொண்டு தங்கள் காய்களை நகர்த்த எதிர் முகாமும் திட்டமிட்டு வருகிறது. ரங்கசாமியின் முடிவுக்காக அவரது கட்சியினர் தாண்டி, பாஜக கூட்டணி மட்டுமல்ல இதர கட்சியினரும் புதுச்சேரியில் காத்திருக்கின்றனர்.