

திமுகவில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேற்று 3-வது நாளாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுச்செயலர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலர் கே.என்.நேரு உள்ளிட்டோர் முன்னிலையில் நடைபெற்ற நேர்காணலில் கோவை, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலத்துக்கு உட்பட்ட தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள் பங்கேற்றனர்.
நேர்காணலில் பங்கேற்ற பின், வெளியில் வந்த திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்திருந்தேன். இன்று நேர்காணலில் பங்கேற்றேன். எத்தனை ஆண்டுகளாக கட்சியில் இருக்கிறீர்கள். தற்போது என்ன பதவியில் இருக்கிறீர்கள். தேர்தலுக்கு எவ்வளவு தொகை செலவுசெய்ய முடியும். மக்களிடம் செல்வாக்கு உள்ளதா, கஜா புயல் தாக்கியபோதும், கரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு செய்த நிவாரண உதவிகள் ஆகியவை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்கு தகுந்த பதிலை அளித்தோம். தொடர்ந்து கொங்கு மண்டலத்தில் வெள்ளாள கவுண்டர் வாக்குகள் ஒவ்வொன்றையும் சிந்தாமல், சிதறாமல் பெற அனைவரும் உழைக்க வேண்டும் என்று ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்றனர்.