

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமைத்துகளம் கண்டன. இதில் காங்கிரஸுக்கு 41 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 8 இடங்களில் மட்டுமே வென்றனர். அதில் அதிக இடங்களில் வென்று அதிமுக ஆட்சியை தக்க வைத்து கொண்டது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலை போன்று ஆகிவிடாமல் இருக்க காங்கிரஸுக்கு குறைந்த இடங்களே ஒதுக்க முடியும் என திமுக தலைமை கறாராக தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் ஏற்ெகனவே காங்கிரஸ் கட்சி தங்களது வெற்றி வாய்ப்பு குறித்து சர்வே நடத்தியிருந்தது. அந்த புள்ளி விவரங்கள் அடிப்படையிலேயே காங்கிரஸ் தலைவர்கள் தொகுதி பங்கீடு குறித்து திமுக தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அவர்கள், சர்வேபடி ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள காங்கிரஸின் வாக்கு சதவீதம், தற்போதைய கட்சியின் வளர்ச்சி, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் போன்ற விவரங்களை சுட்டிக்காட்டினர்.
ஆனால் அதற்கு முன்பாகவே காங்கிரஸ் குறித்த அதே புள்ளி விவரங்களைச் சேகரித்து ஐ-பேக் குழு திமுக தலைமையிடம் கொடுத்துள்ளது. அதன் அடிப்படையிலேயே திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. மேலும் காங்கிரஸில் யாருக்கு சீட் கொடுக்க நினைக்கிறீர்கள் என்ற கேள்வியையும் திமுக தலைமை கேட்டுள்ளது. காங்கிரஸ் உத்தேச வேட்பாளர்கள் குறித்தும் கூட ஐ-பேக் குழு தகவல்களை திரட்டி, திமுக தலைமையிடம் கொடுத்திருப்பது காங்கிரஸ் தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.