

தேர்தல் காலங்களில் சந்தேகப்படும் வகையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பண பரிமாற்றம் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வங்கியாளர்களுடன் சட்டப் பேரவை தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
சட்டப்பேரவைதேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பண பரிவர்த்தனைகள் வங்கிகள் மூலம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களின் வங்கிக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் பண பரிமாற்றம் செய்யப்படுவது தொடர்பாக வருமான வரித்துறையின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர் கண்காணிப்பார். தேர்தல் காலங்களில் சந்தேகப்படும் வகையில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணபரி மாற்றம் செய்யும் போது அந்த வங்கிக் கணக்கு முழு கண் காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.
ஒரு தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து பல வங்கி கணக்குகளுக்கு பணம்பரிமாற்றம் செய்யப்படும் போது தொடர்புடைய நபர் எதற்காக பண பரிவர்த்தனை மேற்கொள்ளப் படுகிறது என்ற விவரத்தினை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், சந்தேகப்படும் வகையில் பண பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது கண்டறியப்பட்டால் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஆட்சியர் தெரி வித்தார். இக்கூட்டத்தில் இந் தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், தேர்தல் வட்டாட்சியர் ஜெயசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.