

2021 தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள் விபரம்:
| வேட்பாளர்கள் பெயர் | கூட்டணி |
|---|---|
| ராமச்சந்திரன் | அதிமுக |
| எஸ்.எஸ்.சிவசங்கர் | திமுக |
| எஸ்.கார்த்திகேயன் | அமமுக |
| சாதிக் பாஷா | மக்கள் நீதி மய்யம் |
| ப.அருள் | நாம் தமிழர் கட்சி |
தொகுதி மறு சீரமைப்பில் 2011 ஆண்டு உருவான குன்னம் சட்டப் பேரவை தொகுதி பெரம்பலூர் மற்றும் அரியலூர் என இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது.
வரகூர் தனித்தொகுதியாக இருந்து 2011 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் குன்னம் பொதுத் தொகுதியானது. பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் வட்டத்தின் ஒரு பகுதி, ஆலத்தூர் வட்டத்தின் ஒரு பகுதி, அரியலூர் மாவட்டத்தின் செந்துறை வட்டம் என இரண்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய அதிக கிராமங்களைக் கொண்ட தொகுதி இது.
இத்தொகுதியில் வன்னியர், தலித் மற்றும் உடையார் சமூக மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
• செந்துறை வட்டம்
• குன்னம் வட்டம் (பகுதி), ஆலத்தூர் வட்டம்(பகுதி)
தொகுதி பிரச்சினைகள்
சிமெண்ட் தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருளான சுண்ணாம்புக் கல் அதிகம் கிடைப்பதால், கனிம சுரங்கங்கள் இத்தொகுதியில் அதிகளவு உள்ளன. ஆனால், இவற்றால் இங்கு வாழும் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்த சுரங்கங்களால் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்பட்டு விவசாயம் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. ஒரு காலத்தில் கடலாக இருந்து நிலப்பரப்பாக மாறியதன் ஆதாரமாக விளங்கும் தொல்லுயிர் படிமங்கள் அதிகம் காணப்பட்டாலும் அவற்றை பாதுகாக்கும் ஏற்பாடுகள் இல்லை.
திருமாந்துறை பகுதியில் தனியார் நிறுவனத்தின் சார்பில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு 13 ஆண்டுகளாக தரிசாகக் கிடக்கிறது. நிலம் வழங்குவோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தமிழக அரசும், தனியார் நிறுவனமும் கூறிய ஆசை வார்த்தையை நம்பி நிலம் வழங்கிய விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். அந்த திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். அல்லது நிலம் வழங்கிய விவசாயிகளிடமே நிலத்தை ஒப்படைக்க வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக இத்தொகுதியில் ஒலிக்கிறது.
இத்தொகுதிக்குட்பட்ட ஒதியம் கிராமத்தில் திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கைவிடப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வெள்ளாற்றில் தடுப்பணைகள் கட்டியும், ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்களை தூர் வாரி, சீரமைத்து நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும். கைவிடப்பட்ட சுண்ணாம்புக் கல் சுரங்கங்களில் அதிக எண்ணிக்கையில் மரங்கள் வளர்த்து வனப்பகுதியாக உருவாக்க வேண்டும் என வாக்காளர்களிடம் எதிர்பார்ப்பு உள்ளது.
இத்தொகுதியில் 2011 ஆம் ஆண்டு திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.சிவசங்கரும், 2016 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.ராமச்சந்திரனும் வெற்றி பெற்று சட்டப் பேரவைக்கு சென்றனர்.
20.1. 2021ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர்பட்டியலின்படி வாக்காளர்கள் விவரம்:
| ஆண் | 1,35,240 |
| பெண் | 1,38,442 |
| மூன்றாம் பாலினத்தவர் | 13 |
| மொத்த வாக்காளர்கள் | 2,73,695 |
2016 தேர்தல் வேட்பாளர்கள் விவரம்
| வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
| 1 | ஆர்.டி.ராமச்சந்திரன் | அதிமுக |
| 2 | த.துரைராஜ் | திமுக |
| 3 | ஜெ.முகமது ஷானவாஸ் | விசிக |
| 4 | க.வைத்திலிங்கம் | பாமக |
| 5 | ஏ.வி.ஆர்.ரகுபதி | ஐஜேகே |
| 6 | ப.அருள் | நாம் தமிழர் |
2011 - தேர்தல் ஒரு பார்வை
| வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
| 1 | சிவசங்கர்.S.S | திமுக | 81723 |
| 2 | துரை காமராஜ் | தேமுதிக | 58766 |
| 3 | ஜெயசீலன்.P | இந்திய ஜனநாயக கட்சி | 13735 |
| 4 | பொன்னிவளவன்.P | சுயேச்சை | 8395 |
| 5 | பாஸ்கரன்.T | பாஜக | 2509 |
| 6 | ரமேஷ்.B | சுயேச்சை | 2264 |
| 7 | ராஜேந்திரன்.K | பகுஜன் சமாஜ் கட்சி | 1526 |
| 8 | மருததுரை.G | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 1433 |
| 9 | குமார்.M | சுயேச்சை | 1411 |
| 10 | தங்கவேல்.M | இராஷ்டிரிய ஜனதா தளம் | 1070 |
| 11 | சாமிநாதன்.P | சுயேச்சை | 901 |
| 12 | தேத்தி.M | லோக ஜனசக்தி கட்சி | 561 |
| 174294 |