

தமிழக பசுமை இயக்கத் தலைவர்ஈரோடு மருத்துவர் வெ.ஜீவானந்தம் (76) உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
தமிழகத்தின் சுற்றுச்சூழல் இயக்கச் செயல்பாடுகளில் மிகத் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர் ஈரோடு வெ.ஜீவானந்தம். இவரது தந்தை வெங்கடாசலம் சுதந்திரப் போராட்ட வீரர். திருச்சியில் பட்டப் படிப்பை முடித்த ஜீவானந்தம், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வியையும், சென்னையில் மயக்கவியலில் முதுநிலை மருத்துவப் பட்டமும் பெற்றவர்.
காந்திய - கம்யூனிச ஆர்வலரான ஜீவானந்தம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை முன்னெடுத்துச் செயல்பட்டவர். குறைந்த கட்டணத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வகையில்,கூட்டுறவு முறை மருத்துவமனையை ஈரோட்டில் தொடங்கக்காரணமாக இருந்தவர். மதுப்பழக்கத்துக்கு ஆளானவர்களை மீட்கும் சிகிச்சையை 25 ஆண்டுகளுக்கு மேலாக அளித்து வந்தவர். மருத்துவம், சுற்றுச்சூழல் சார்ந்த பல நூல்களையும் எழுதியுள்ள ஜீவானந்தம், பல நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இதயம் சார் உடல்நலக் குறைவுக்காகச் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்த மருத்துவர் ஜீவானந்தம், நேற்று பிற்பகலில் ஈரோட்டில் காலமானார். மறைந்த ஜீவாவுக்கு இந்திரா என்ற மனைவியும் சத்யா என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர்.