

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
வேட்பாளர்கள் நகராட்சிப் பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்ய அனுமதி இல்லை. கிராமப்பகுதிகளில் தனி நபர்களின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம்.
அரசியல் கட்சியினர் மாற்று கட்சியினரின் ஊர்வலங்களிலோ, கூட்டங்களிலோ இடையூறு ஏற்படுத்தவோ அல்லது துண்டு பிரசுரங்கள் வெளியிடுவதோ கூடாது. பிற கட்சியினரின் போஸ்டர்களை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது. தனியார் வாகனங்களில் கட்சிக்கொடி, தலைவர்களின் படங்களை வைத்துக் கொள்ள அனுமதி யில்லை. காவல் கண் காணிப்பாளர் முன் அனுமதி பெற்றே பிரச்சாரத் திற்கு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்.
கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது. கல்வித்துறை நிறுவனங்கள், மைதானங் களில் அரசியல் நடவடிக்கைகள் ஊர்வலங்கள் நடத்தக்கூடாது. பொதுக்கூட்டம் நடத்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் முன் அனுமதி பெற வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் 18 பறக்கும் படை குழுக்கள், 18 நிலையான கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டு சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை இலவச தொலைபேசி எண் 1950 மூலம் தெரியப் படுத்தினால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் படும். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள cVIGIL (citizen VIGIL) என்ற செயலியை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது.
இந்த செயலியை செல் போனில் பதிவிறக்கம் செய்து பணம் வழங்குதல், பொருட்கள் வழங்குதல், அனுமதி இன்றி சுவர் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் இந்த செயலியில் புகார் செய்யலாம். இந்த புகார் தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் அலுவலர், சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு புகார் தெரிவித்த இடத்தின் முழுவிவரத்தோடு வந்து சேரும். இதையடுத்து புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் சுமுகமாக நடைபெற அனைத்து கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும், என்றார்.