

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக மக்களின் கவனத்தைத் தங்கள் பக்கம் திருப்ப அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு பாணியை கடைப்பிடித்து வருகின்றனர். முதல்வர் பழனிசாமி புதிய திட்டங்களுக்கு அடிக்கல், வழக்குகள் வாபஸ், பயிர்க்கடன் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.
மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினோ, உங்கள் குறை எதுவாக இருந்தாலும் என்னிடம் மனு கொடுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நூறு நாளில் அதை நிறைவேற்றித் தருகிறோம் என்று, ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்நிலையில், காங்கிரஸ் நாமும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைத்து, சிவகங்கையில் மாட்டு வண்டியில் சென்று மக்களிடம் மனு வாங்கும் நிகழ்ச்சிகளை தொடங்கியுள்ளது. இதற்காக மாட்டு வண்டியில் மனு வாங்கும் பெட்டி ஒன்றை வைத்து ஊர் ஊராக பவனி வருகின்றனர். 25-ம் தேதி சிவகங்கை அருகே ஒக்கூரில் மாட்டு வண்டியில் சென்று மனுக்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்த காங்கிரஸார், அதைத் தொடங்கி வைக்க சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்தை அழைத்திருந்தனர்.
அவரும் மகிழ்ச்சி பொங்க மாட்டு வண்டியில் ஏறி புகைப்படக்காரர்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்தார். அதன் பிறகு கீழே இறங்கி ஊர்வலத்தைத் தொடங்கி வைப்பதற்காக கொடியை அசைத்தார். அப்போது மிரண்ட மாடு தாறுமாறாக ஓடத் தொடங்கியது. இதில் வேகமாகச் சென்ற மாட்டு வண்டி அங்கிருந்த கார்த்தி சிதம்பரத்தின் கார் மீது மோதி நின்றது. இதில் மாட்டு வண்டி சேதமடைந்தது. நல்லவேளை யாருக்கும் காயமேற்படவில்லை. இந்த களேபரத்தில் அங்கிருந்த கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸார் செய்வதறியாது வெலவெலத்துப் போயினர். ஒருவழியாக மாட்டுக்காரர் வந்து மாட்டை அடக்கி அழைத்துச் சென்றார். அதன் பிறகே காங்கிரஸார் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.