

அதிமுகவை மீட்போம், வரும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று டிடிவி தினகரனை முதல்வராக்குவோம் என அமமுக கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் முதல் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டம் அக்கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அன்பழகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை, வேலூர், தருமபுரி, கோவை, நெல்லை, மதுரை, திருச்சி,தஞ்சை, விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் 10 மண்டலங்களில் காணொலிக் காட்சி மூலமாக நடைபெற்ற இக்கூட்டத்தில், செயற்குழுமற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், அதிமுகவை மீட்டெடுத்து, சசிகலாவின் ஆசியுடன் டிடிவி தினகரனை முதல்வர்அரியணையில் அமர்த்திட அனைவரும் அயராது பாடுபடுவது, சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட அனைத்து முடிவுகளை எடுப்பதற்கும் டிடிவி தினகரனுக்கு முழுஅதிகாரம் அளிப்பது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யவலியுறுத்துவது, பெட்ரோல், டீசல்விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், ‘‘அதிமுகவைமீட்டெடுக்க வேண்டும் என்ற காலத்தின் கட்டாயத்தில் உருவானதுதான் அமமுக. இந்த இயக்கத்தை நடத்தவிடாமல் கொடுக்கப்பட்ட தொல்லைகளை, சசிகலாவும், நானும் முறியடித்து, மீண்டும் குக்கர் சின்னத்தைப் பெற்றோம். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள், மார்ச் 3-ம் தேதிமுதல் 10-ம் தேதி வரை வழங்கப்படும். திமுகவை வீழ்த்தப் போகிறஇயக்கமாக அமமுக இருக்கும்.’’என்றார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஒற்றுமையாக இருந்து திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுக்க வேண்டுமென சசிகலா கூறியுள்ளார். இதில், வேறுஓர் அர்த்தம் இருப்பதாக நான் பார்க்கவில்லை. அதிமுகவை மீட்டெடுக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்கள் 3-வதுஅணி அல்ல, அமமுக தலைமையிலான அணியே முதல் அணியாகஇருக்கும். திமுகவை ஆட்சிக்கு வராமல் தடுப்பதே எங்கள் நோக்கம்.புதுச்சேரி ஆட்சி மாற்றத்தில் நடந்தஜனநாயக படுகொலைக்கு திமுக தான் காரணம்.’’என்றார்.