

ஆம்பூர்: தரமற்ற மருந்து தயாரித்த நிறுவன உரிமையாளர் மற்றும் நிர்வாகிக்கு ஆம்பூர் நீதிமன்றம் அபராதம் விதித்து, ஒருநாள் நீதிமன்ற காவல் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சரக மருந்துகள் ஆய்வாளர் கடந்தசில மாதங்களுக்கு முன்பு ஆம்பூர் பகுதிகளில் உள்ள மருந்துக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளார். அதில், மருந்துகளின் மாதிரியை சேகரித்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டது. அவற்றில், குறிப்பிட்ட மருந்து ஒன்று தரமற்ற நிலையில் இருப்பதாக பரிசோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது.
அதன்பேரில் மருந்துகள் ஆய்வாளர் சார்பில் ஆம்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை முடிந்து, மருந்து தயாரித்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹேமந்த் ஜிண்டால், நிர்வாகி சைலேந்திரகுமார் சுக்லா ஆகியோருக்கு தலா ரூ.20 ஆயிரம் மற்றும் நீதிமன்றம் கலையும் வரை ஒரு நாள் நீதிமன்ற காவல் வைக்குமாறு ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கனிமொழி நேற்று உத்தரவிட்டார்.