

பழைய ஓய்வூதியத் திட்டம், பூரண மதுவிலக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை தற்போதைய அதிமுக அரசு நிறைவேற்றவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறது மத்திய பாஜக அரசு. பாஜகஆட்சியில் இல்லாத மாநிலங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது அல்லது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அரசை மிரட்டுவது என தொடர்ந்து ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்கு. கோரிக்கைகளுக்காகப் போராடும் விவசாயிகள், தொழிலாளர்களை கைது செய்வதும் தொடர்கிறது.
தமிழகத்தில் மத்திய அரசின் பினாமி அரசாகவே அதிமுக அரசு செயல்படுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இருக்கக் கூடாது என்பது மரபாகும். ஆனால், தேர்தலைக் கருத்தில் கொண்டு, முழுமையான பட்ஜெட்போல இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். தமிழக மக்கள் மீதுரூ.5.70 லட்சம் கோடி கடனைசுமத்தியதுடன், ரூ.41 ஆயிரம்கோடி பற்றாக்குறை பட்ஜெட்டையும் சமர்ப்பித்துள்ளனர். அடுத்து வரும் அரசு பெரிய அளவுக்கு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. எனினும், அடுத்து ஆட்சியமைக்கும் திமுக, இதை திறமையாக எதிர்கொள்ளும்.
நூல் விலை உயர்வால் பனியன் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாளிகள் மட்டுமின்றி, லட்சக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசே நூல்கொள்முதல் செய்து, நியாயமான விலையில் ஜவுளி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, பூரணமதுவிலக்கு உள்ளிட்டவை தொடர்பாக முன்னாள் முதல்வர்ஜெயலலிதா அளித்த பல்வேறுவாக்குறுதிகளை தற்போதையஅதிமுக அரசு நிறைவேற்றவில்லை.
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களை அழைத்துப் பேசி, தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.