‘அதிமுகவுக்கு இது வாழ்வா, சாவா தேர்தல்'- வைத்திலிங்கம் எம்.பி. கருத்து

‘அதிமுகவுக்கு இது வாழ்வா, சாவா தேர்தல்'- வைத்திலிங்கம் எம்.பி. கருத்து
Updated on
1 min read

வரும் சட்டப்பேரவைத் தேர்தல், அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல். நாம் வெற்றி பெறவில்லை எனில், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற வடக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் நடத்தப்படும் இலவச திருமணங்களை, நிகழாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் காரணமாக, மே மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல், அதிமுகவுக்கு வாழ்வா, சாவா தேர்தல். நாம் வெற்றி பெறவில்லை எனில், நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். இதை மனதில் வைத்து, தேர்தலில் கட்சித் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும், வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அனைவரும் பணியாற்ற வேண்டும்.

மழை பாதிப்பு நிவாரணம், கூட்டுறவு பயிர்க் கடன்கள் தள்ளுபடி, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என பல்வேறு சாதனைகளை இந்த அரசு செய்துகொண்டிருக்கிறது. இன்னும், வரும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் யாரும் எதிர்பார்க்காத பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவிக்க இருக்கிறார். அந்த அளவுக்கு மக்கள் மீது அவர் பற்றுடன் இருக்கிறார். எனவே, அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி பணியாற்றுங்கள். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், மீண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in