

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்துஸ்தான் கல்விக் குழுமத் தலைவர் எலிசபெத் வர்கீஸ் தலைமை தாங்கினார். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அவர் பேசும்போது, "நல்ல குடிமகனாக வளருவதற்கும், வாழ்வதற்கும் இந்துஸ்தான் போன்ற கல்வி நிலையங்கள் அளிக்கும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் 'இதுவும் கடந்து போகும்' என்ற உறுதியோடு நம் முயற்சியில் இருந்து விலகாமல் இருக்க வேண்டும். உங்களுடைய திறமைகளையும், நம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இயக்குநர் சூசன் மார்த்தாண்டன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து, பட்டம் பெறும் மாணவர்களுக்கு வாழ்த்துகளை கூறினார். முதல்வர் சீ.திருமகன் வரவேற்புரையாற்றி, ஆண்டறிக்கையை வாசித்தார். துணை முதல்வர் சாமுவேல் சம்பத் குமார் நன்றி கூறினார்.
விழாவில் 571 பேர் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழகத் தரவரிசையில் தகுதிபெற்ற 11 மாணவர்களுக்கு முனைவர் கே.சி.ஜி.வர்கீஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக பரிசுத் தொகை ஒரு லட்சம் ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டது. புல முதன்மையர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.