மானிய விலையில் ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மானிய விலையில் ஆடுகள் பெற விண்ணப்பிக்கலாம்	 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Updated on
1 min read

ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செம்மறி, வெள்ளாடுகளை மானிய விலையில் பெற்று வளர்க்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக புறக்கடை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் செம்மறி, வெள்ளாடுகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக கொம்பூதி, மாலங்குடி, மஞ்சக்கொல்லை, பி.முத்துச் செல்லாபுரம், மும்முடிச்சாத்தான், களத்தாவூர், மேலமடை, கற்காத்தி, பூக்குளம், சின்னஅக்கிரமேசி, பாண்டியூர், பனைக்குளம், களரி, செவ்வூர், நல்லிருக்கை, புத்தேந்தல், அரியக்குடி உட்பட 50 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரு கிராமத்தில் 10 பயனாளிகள் வீதம் மொத்தம் 500 பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்கப்படும். மத்திய அரசின் மானியம் 60 சதவீதம், மாநில அரசின் மானியம் 30 சதவீதம், பயனாளியின் பங்குத் தொகை 10 சதவீதம் ஆகும். ஒரு பயனாளி பங்குத் தொகையாக ரூ.6,600 செலுத்த வேண்டும்.

நிலமற்ற மற்றும் சிறு, குறு விவசாயிகள், வறுமைக் கோட் டுக்கு கீழ் உள்ள விவசாயிகள், விதவைகள், கணவனால் கைவிட ப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளுக்கு 4-5 மாத வயதுடைய 10 செம்மறி அல்லது வெள்ளாடுகள் மற்றும் 5-6 மாத வயதுடைய 1 கிடா வழங்கப்படும். ஆடுகளுக்கு 3 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்யப்படும்.

தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒரு நாள் ஆடு வளர்ப்பு குறித்த பயிற்சியை கால்நடைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வழங்குவர்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவிரும்பும் பொதுமக்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in