

முதல்வர் பழனிசாமி இன்று (21-ம் தேதி) சேலம் வருகிறார். இதையொட்டி, மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் பழனிசாமி, இன்று (21-ம் தேதி) புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் கரூர், நாமக்கல் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பிரச்சாரத்துக்கு பின்னர் கார் மூலம் இரவு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்துக்கு வருகிறார்.
சேலம் வரும் முதல்வருக்கு எல்லையில் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுக-வினர் வரவேற்பு அளிக்கின்றனர். நாளை (22-ம் தேதி) காலை 10 மணிக்கு ஆத்தூர் செல்லியம்பாளையத்தில் நடக்கும் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.
பின்னர் தலைவாசலில் நடைபெறவுள்ள அரசு விழாவில், ரூ.1000 கோடியில் கட்டப்பட்டுள்ள கால்நடை பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். பின்னர் கார் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு சேலம் மாநகர காவல் துறை ஆணையர் சந்தோஷ்குமார், எஸ்பி தீபாகாணிகர் தலைமையில் மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.