

அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா, இழந்த சைக்கிள் சின்னத்தைப் பெறுவதற்காக 12 தொகுதிகள் கேட்பதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1996-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய ஜி.கே.மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். 1996-ல் திமுக - தமாகா கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அந்தத் தேர்தலில் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்டது. 1998, 1999 மக்களவைத் தேர்தல், 2001 பேரவைத் தேர்தலில் அதே சைக்கிள் சின்னத்தில் தமாகா போட்டியிட்டது. ஜி.கே.மூப்பனார் மறைவுக்குப் பிறகு தமாகா தலைவரான அவரது மகன் ஜி.கே.வாசன், கட்சியை கலைத்து விட்டு காங்கிரஸில் இணைந்தார்.
2014 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து விலகிய ஜி.கே.வாசன், மீண்டும் தமாகாவை தொடங்கினார். 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை. 2019 மக்களவைத் தேர்தலில் தமாகாவுக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால், தேர்தல் ஆணைய விதிகளின் படி 5 சதவீத தொகுதிகளில் அதாவது 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடாததால் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கவில்லை. தஞ்சாவூர் தொகுதியில் மட்டும் போட்டியிட்ட தமாகாவுக்கு ஆட்டோ சின்னம் கிடைத்தது.
இந்தத் தேர்தலில் குறைந்தது 12 பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைக்கும். எனவே, அதிமுகவிடம் 12 தொகுதிகளை ஜி.கே.வாசன் கேட்பதாக அக்கட்சியினர்தெரிவிக்கின்றனர். ஆனால், பாமக, பாஜக, தேமுதிக என பல கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டியிருப்பதால் 5 தொகுதிகள் வரை மட்டுமே தர முடியும் என்று அதிமுக தரப்பில் கூறப்படுவதாக தமாகா நிர்வாகி ஒருவர் 'இந்து தமிழ்' நாளிதழிடம் தெரிவித்தார்.