

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சென்னம்பூண்டியில் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரியில், ஒரு மீட்டர் அளவுக்குப் பதிலாக, 2 மீட்டர் வரை முறைகேடாக மணல் எடுப்பதை அரசு தடுத்து நிறுத்தி, குவாரியை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தலைமையில் கிராம மக்கள் நேற்று ஆற்றில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், பூண்டி திருநாவுக்கரசு, அண்ணாதுரை, அன்பில் சண்முகம், அரியூர் கமலக்கண்ணன், கூத்துார் ரங்கராஜன், விவசாய சங்கத் தலைவர் உதயகுமார், விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் சிவசாமி, மாதர் சங்க மாநிலக் குழு உறுப்பினர் கலைச்செல்வி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் வெ.ஜீவக்குமார் கூறியது: தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசு மணல் குவாரி, கல்லணையில் இருந்து 10 கி.மீ தொலைவுக்குள் இருப்பதால், தொடர்ந்து மணல் எடுக்கும்பட்சத்தில், கல்லணை பாலம் இடிந்து விடும் அபாயம் உள்ளது. எனவே, அரசு மணல் குவாரியை மூட வேண்டும். மேலும், மணல் குவாரி மட்டுமின்றி, ஆற்றுப்படுகையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் தனிநபர்களும், மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, மணல் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.