

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் பிப்ரவரி 17 முதல் 24-ம் தேதி வரை சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கடந்த 15-ம் தேதி அறிவித்திருந்தார். ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து ரூ.25 ஆயிரம் கட்டணத்துடன் விருப்ப மனுவை அளிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தனித் தொகுதிகளுக்கும், பெண்களுக்கும் ரூ.15 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி விருப்ப மனுக்கள் பெறுதல் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 1,000-க்கும் அதிகமான திமுகவினர் ரூ.1,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றனர். அதில் 100 பேர் விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா மற்றும் அலுவலக நிர்வாகிகளிடம் அளித்தனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் போட்டியிடவும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவும் வலியுறுத்தி 100-க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளதாக திமுக அலுவலக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
விருப்ப மனுக்கள் பெறுதல் தொடங்கியதையொட்டி திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.