

சேலம் விமான நிலையத்தில் இருந்து திருப்பதி, ஹைதராபாத், கோவா உள்ளிட்ட புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க வேண்டும் என ஆலோசனைக் குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
சேலம் காமலாபுரம் விமான நிலைய ஆலோசனைக் குழுவின் 2-வது கூட்டம் சேலத்தில் நடந்தது. விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா, மேட்டூர் துணை ஆட்சியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆலோசனைக் குழு தலைவர் எம்பி பார்த்திபன் (திமுக) பேசியதாவது:
சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை உள்ளது. ஆனால், நிலத்தை கையகப்படுத்தும்போது, நிலத்தின் வழிகாட்டி மதிப்பு ரூ.8 லட்சம் வரை தான் கிடைக்கும்.
இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயிகளின் நலன் முக்கியம். எனவே, தரிசு நிலங்களை கண்டறிந்து, அவற்றை விமான நிலையத்துக்கு கையகப்படுத்த வேண்டும்.
கையகப்படுத்தும் நிலத்துக்கு விவசாயிகளை பாதிக்காத வகையில் சந்தை மதிப்பை நிர்ணயித்து இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் இருந்து ரூ.300 கோடி வரை நிதியை பெற முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விமான நிலைய இயக்குநர் ரவீந்திர சர்மா பேசும்போது, “சேலம் விமான நிலையத்தில் ரூ.35 கோடியில் பல்வேறு விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக இரு விமானங்களை நிறுத்துமிடம் கட்டப்பட்டு வருகிறது. அவசர கால சாலை மற்றும் சுற்றுச் சாலை ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது” என்றார்.
‘நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மருத்துவச் சுற்றுலாவுக்காக சேலத்துக்கு பலர் வருகின்றனர். எனவே, சேலத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் விமானங்களை இயக்க வேண்டும். சேலத்தில் இருந்து ஷீரடி, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கும் பலர் செல்கின்றனர். எனவே, ஹைதராபாத், திருப்பதி, டெல்லி, கோவா உள்ளிட்ட நகரங்களுக்கும் விமானங்களை இயக்க வேண்டும். விமான நிலையத்தின் உள்ளே உணவக வசதி, டாக்ஸி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும்’ என கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பலர் வலியுறுத்தினர்.
மேலும், கூட்டத்தில் ‘பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக புதுச்சேரிக்கு இரு மார்க்கத்திலும் உதான் திட்டத்தின் கீழ் விமான சேவை செயல்படுத்தும் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும். சென்னைக்கு மாலை நேர விமான சேவையை தொடங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ட்ரூ ஜெட் ஏர்வேஸ் மேலாளர் பிரசன்ன குமார், சேலம் மாநகராட்சி உதவி ஆணையர் ரவி மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் கல்பனா, விமலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.