

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நடந்த ஓவியப் போட்டியால், பள்ளிச் சுவர்கள் எழிலடைந்துள்ளன.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு நடுநிலைப் பள்ளிகள், கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, குழந்தைகளின் கல்வி உரிமை, பெண் கல்வி, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, தன் சுத்தம், சுகாதாரம் என்ற தலைப்புகளில் ஓவியப் போட்டி நடந்தது. இதில், 350 அரசு நடுநிலைப் பள்ளிகள், 13 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.
மாணவர்கள் வீட்டில் இருந்து ஓவியங்களை வரைந்து, அஞ்சல் அல்லது வாட்ஸ்அப் அல்லது நேரடியாக பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், சிறப்பாக ஓவியம் வரைந்த 5 மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில், அவரவர் பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டு, பள்ளி சுவர்களில் ஓவியம் வரைய ஏற்பாடு செய்யப்பட்டது.
சிறப்பாக, ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.600, 2-ம் பரிசு ரூ.500, 3-ம் பரிசு ரூ.400 வழங்கப்பட்டன.
சேலம் கன்னங்குறிச்சி அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற 5 மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் ஆகியோர் பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கினர்.