நெல்லை- தென்காசி வழித்தடத்தில் ரயில்வே பொதுமேலாளர் இன்று ஆய்வு

நெல்லை- தென்காசி வழித்தடத்தில்  ரயில்வே பொதுமேலாளர் இன்று ஆய்வு
Updated on
1 min read

திருநெல்வேலி- தென்காசி வழித்தடத்தில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

காலை 9 மணிக்கு கேரள மாநிலம் புனலூரில் தனது வருடாந்திர ஆய்வை தொடங்குகிறார். அங்கிருந்து காலை 11.40 மணிக்கு பாவூர்சத்திரம் மற்றும் கடையம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள கடவு பாதைகள், வளைவுகள், பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்கிறார். பிற்பகல் 2.45 மணி முதல் 3.45 வரை அம்பாசமுத்திரம் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்கிறார். அங்கிருந்து திருநெல்வேலிக்கு வரும் அவர் மாலை 4.30 மணி முதல் 5.30 மணிவரை ஆய்வு மேற்கொள்கிறார்.

இதனிடையே திருநெல்வேலி- தென்காசி ரயில்வே வழித்தடத்தில் போதுமான ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் பாண்டியராஜா, அந்தோனி ஆகியோர் தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:

இந்த வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. திருநெல்வேலியில் 3 நாட்கள் காலியாக நிறுத்தி வைக்கப்படும் தாதர் ரயில் பெட்டிகளை பயன்படுத்தி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருநெல் வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்னைக்கு வாராந்திர ரயில் இயக்க, ரயில்வே வாரியம் கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. அந்த ரயிலை உடனடியாக இயக்க வேண்டும். குருவாயூரிலிருந்து புனலூர் வரை இயங்கும் ரயிலை, செங்கோட்டையிலிருந்து மதுரை வரை இயங்கிய பயணிகள் ரயிலுடன் இணைத்து குருவாயூர் மதுரை ரயிலாக இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது. அந்த ரயி லையும் உடனே இயக்க வேண்டும். அம்பாசமுத்திரம்- தென்காசி வழியாக பெங்களூரு, மங்களூரு போன்ற நகரங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்க வேண்டும்.

தற்போது, திருநெல்வேலியில் இருந்து பாலக்காடு வரை செல்லும் பாலருவி விரைவு ரயிலுக்கு கடையம், பாவூர்சத்திரம், செங் கோட்டை ஆகிய இடங்களில் இரு மார்க்கத்திலும் நிறுத்தங்கள் வழங்க வேண்டும். முன்பதிவற்ற ரயிலை இந்த வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in