

அதிமுகவின் கொள்கை மற்றும்வடிவம் இன்று மாறிவிட்டதாகவும், பாஜகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம் என்றும், அதிமுக நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான திருச்சி கே.சவுந்திரராசன் தெரிவித்துள்ளார்.
திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், அதிமுகவை 1972-ம் ஆண்டு தொடங்கினார். அப்போது உறுப்பினர் சேர்ப்பு படிவத்தில் கையொப்பமிட்டு சேர்ந்தவர்களில் 7-வது நபர் திருச்சி கே.சவுந்திரராசன். முதலில் கையொப்பமிட்ட எம்ஜிஆர் உள்ளிட்ட 12 பேரில் தற்போது சவுந்திரராஜன் மட்டுமே உயிருடன் உள்ளார். தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், அவர் நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: அதிமுக தொடங்கப்பட்டபோது அண்ணாவின் கொள்கைகள் அனைத்தையும் இணைத்து, புதுக்கோட்டை வழக்கறிஞர் எஸ்.சுந்தர் ராஜனால் கொள்கைப் பட்டயம் தயாரிக்கப்பட்டது. அதில், ‘கட்டுண்டு வாழ்வோம்’, ‘பிரிவினை நாடோம்’, ‘சமநிலையில் இணைவோம்’ என்பதும் லஞ்சம் ஊழலில் சம்பாதித்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமை ஆக்கப்படும் என்பதும் பிரதான கொள்கைகளாக இருந்தது.
ஆனால், எம்ஜிஆர் மறைவுக்குப்பின், சுயமரியாதையில் உருவான இயக்கம் கொள்கைகளை மறந்து போனது. இன்று அதிமுகவின் கொள்கை மற்றும் வடிவம் மாறிவிட்டது. எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் இன்று வரலாறு தெரியாதவர்கள் கையில் சிக்கியுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான் கடந்த 2019-ம் ஆண்டில் அதிமுக தோற்றது.
அதிமுகவை பட்டுப்போகாமல் பாதுகாக்க வேண்டும் என்று அதிமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம். நான் மக்களின் கருத்தை தான் பிரதிபலிக்கிறேன். அதிமுகவை காப்பாற்றும் கடமை எனக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.