சேலம் அம்மாப்பேட்டை வள்ளுவர் காலனியில் சுற்றுச்சூழலை காக்க 500 மரக்கன்றுகளுடன் 6,000 சதுர அடியில் நகருக்குள் வனம்

சேலம் அம்மாப்பேட்டை வள்ளுவர் காலனியில் 'நகருக்குள் வனம் ' உருவாக்கும் விதமாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார்.
சேலம் அம்மாப்பேட்டை வள்ளுவர் காலனியில் 'நகருக்குள் வனம் ' உருவாக்கும் விதமாக மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார்.
Updated on
1 min read

சுற்றுப்புறச் சூழலை பேணிக்காக்கும் வகையில், சேலம் அம்மாப்பேட்டை வள்ளுவர் காலனியில், 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 500 மரக்கன்றுகளை நட்டு, ‘நகருக்குள் வனம்’ (மியாவாக்கி வனம்) உருவாக்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் சண்முக வடிவேல், உதவி செயற்பொறியாளர் திலகா, சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பேசியதாவது:

நகருக்குள் வனம் திட்டத்தில் அதிக அளவில் மரங்களை நடுவதன் வாயிலாக காற்றில் உள்ள கரியமிலவாயுவை கட்டுப்படுத்தி, ஆக்ஸிஜனை அதிகப்படுத்த முடியும். மேலும், காற்று மாசினை கட்டுப்படுத்த இயலும். அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு, நகருக்குள் வனம் உருவாக்கப்பட்டு வருகிறது.

வள்ளுவர் நகர் பகுதியில் சுமார் 6,000 சதுர அடி பரப்பளவில் புங்கன், வேம்பு, பூவரசு, மகாகனி, நாவல், தேக்கு, இலந்தை இனங்கள் உட்பட 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகளை பராமரிக்கும் பணிகளை வள்ளுவர் நகர் நலச் சங்கத்தினர் மேற்கொள்வர். இப்பகுதியில் உள்ள கிணறு சீரமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் முழுமையாக பயன்படுத்தும் வகையில் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். மேலும், மக்கள் மாலை நேரங்களில் அமருவதற்கு ஏதுவாக இருக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது.

நகருக்குள் வனங்களில் நடப்படும் மரங்களை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, பாதுகாத்து பராமரித்திட தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். மேலும், மாநகரின் பல்வேறு பகுதிகளில் தனியார் பங்களிப்புடன் நகருக்குள் வனங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in