

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 மாணவர்கள், திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீஸாருடன் இணைந்து புஷ்பா திரையரங்க வளைவு அருகில்,32-வது சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங் கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாநகர போக்குவரத்து உதவிஆணையர் கோடிசெல்வன்,போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள் பாண்டியராஜன், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாணவ செயலர்கள் சந்தோஷ், சந்தீப், காமராஜ் தலைமையில் 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா செய்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனத்தில்இருவருக்கு மேல் செல்லக்கூடாது போன்ற நிகழ்வை நடித்துக் காட்டினர். மாணவர்கள் எமன் வேடமணிந்து தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் வருபவர்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என துண்டுப் பிரசுரங்கள் கொடுத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை விதிகளை பின்பற்றுவோம் என்று அனைவரும் உறுதி ஏற்கும் வகையில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.